Wednesday, October 03, 2012

thumbnail

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சி.வி.சண்முகம் வகித்து வந்த வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி. ரமணா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊரக தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.மோகன் எதிர்வரும் அக்டோபர் 6ம் நாள் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்கிறார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் எட்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். தமிழக சட்டப் பேரவை சபாநாயகராக இருந்த டி ஜெயகுமார் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக தற்போதைய துணை சபாநாயகர் தனபால் அப் பொறுப்புக்கு வரவுள்ளார். சபாநாயகர் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About