Friday, October 26, 2012

thumbnail

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடபடும் -டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்

எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உயர்த்தியதற்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தேர்வு முடிவுகள் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் (ஒவ்வொரு பாடத்திலும் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.) இன்று வெளியிடப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியது:
இந்திய மருத்துவக் கவுன்சிலின் அடிப்படை விதிமுறைகளுக்கு முரண்படாத வகையில், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், புதிய விதிகளை எல்லா மருத்துவப் பல்கலைக்கழகங்களும் உருவாக்கலாம் என்று மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் என்பது தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த எங்கள் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகும்.
60 சதவீதம் பேர் தேர்ச்சி: இந்த புதிய விதிமுறைகளின்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும்.
புதிய விதிமுறைகளின்படி இந்த ஆண்டு தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 565 மாணவர்களில் உத்தேசமாக 2 ஆயிரத்து 158 பேர் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இதன்படி மொத்தம் 60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 52 சதவீத மாணவர்களும், அரசுக் கல்லூரி மாணவர்கள் 66 சதவீதம் பேரும் தேர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது.
கருணை மதிப்பெண்: எனினும், மொத்தமுள்ள மூன்று பாடங்களில் இரண்டில் தேர்ச்சி அடைந்து, ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். இதனால் தேர்ச்சி விகிதம் 65 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்றார் அவர்.
இந்த நிலையில் தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வகுத்த புதிய விதிமுறைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாகவும் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About