Thursday, October 04, 2012

thumbnail

சென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து - ஒருவர் பலி

சென்னையில் கலங்கரை விளக்கம் அருகே அரசு நகரப்பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால் ஒருவர் பலியானார் சிலர் காயம் அடைந்தனர்.

சென்னை பெசன்ட் நகரில் இருந்து திருவொற்றியூர் சுங்க சாவடிக்கு, 6-ஏ வழித்தட அரசு பஸ் புறப்பட்டு வந்தது. மதியம் 12 மணி அளவில் அந்த பஸ் மெரீனா கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. கலங்கரைவிளக்கம் எதிரே அகில இந்திய வானொலி நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டினார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த 3 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியபடி ஓடிய பஸ், ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது. பஸ் மாறுமாறாக வருவதை கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டு கத்தினர். பஸ் நின்றதும் டிரைவரும், கண்டக்டரும் இறங்கி ஓடிவிட்டனர். பஸ் மோதிய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காயத்துடன் ரோட்டில் விழுந்து கிடந்தனர். ஒருவர் மட்டும் பஸ்சுக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி பிணமாக கிடந்தார். அவர் பெயர் விவரம் தெரியவில்லை.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த பெண் உள்பட 4 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About