Thursday, October 04, 2012

thumbnail

விண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலையம்

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் , விண் குப்பைத்துகள் ஒன்றுடன் மோதும் சாத்தியக்கூறைத் தவிர்ப்பதற்காக, வேறு ஒரு சுற்றுப்பாதைக்கு நகர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு விண்வெளி வீரர்கள் வசிக்கும் இந்த நிலையம், உந்தும் ராக்கெட்டுகளை ஏவி, அதன் மூலம், தனது சுற்றுப்பாதையை நோக்கி ஒரு மணிக்கு 28,000 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் விண் குப்பைத்துகளின் பாதையிலிருந்து விலக முயலும்.
பூமியின் அருகாமையில் இருக்கும் விண் சுற்றுப்பாதையில் மட்டும் சுமார் 21,000 அபாயகரமான விண்குப்பைத் துகள்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச விண் நிலையத்தை இயக்குவதில் முக்கியமான ஒரு பகுதியே , இந்த மாதிரி விண் துகள்களின் மீது ஒரு"கண்" வைத்துக்கொண்டிருப்பதுதான்.

ஒரு வாரத்துக்கு முன்னர்தான், இந்த நிலையத்தின் ரஷ்யக்கட்டுப்பாட்டாளர்கள், இரண்டு துகள்கள் நெருங்கியதாகத் தோன்றியபோது, அதைத் தவிர்க்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்தனர்.
பின்னர் அதை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த நேரத்தில் அது போன்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிந்தது.
இந்த புதிய அச்சுறுத்தல், கடந்த வாரம் நடந்ததை விட சற்று மேலும் அபாயகரமானது என்று நம்பப்படுகிறது.
இந்த விண் நிலையத்தைப் பொறுத்தவரை, கட்டுப்பாட்டாளர்கள் எந்த ஆபத்தான சாத்தியக்கூறையும் புறக்கணிப்பதில்லை. மோதல் நடப்பதற்கு பத்தாயிரத்தில் ஒரு சாத்தியக்கூறு இருந்தாலே அவர்கள் இந்த நிலையத்தை நகர்த்தி விடுகிறார்கள்.

இந்த ஆண்டு முன்னதாக , ஒரு செய்கோளின் துகள் சர்வதேச விண் நிலையத்தினை நெருங்கிவருவது , மிகத் தாமதாக கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த நிலையத்திலிருந்த விண்வெளி வீரர்கள் ஒரு தப்பிக்கும் கேப்ஸ்யூலில் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் இந்த சமயத்தில் அந்த விண் துகள் இந்த நிலையத்தை 23 கிலோமீட்டர் தூரத்தில் மோதாமல் நழுவவிட்டது.
நாசா விண் வெளி ஆராய்ச்சி நிலையம், 10 செண்டிமீட்டருக்கும் பெரிய விண் துகள்களை கண்காணிக்கிறது. இது மாதிரி அளவுள்ள துகள்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதம் பெருகியிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் 2009ல் இரு செய்கோள்களுக்கிடையே நடந்த மோதல் என்று கூறப்படுகிறது.
2007ம் ஆண்டில் சீனா, தனது செய்கோள் ஒன்றை தாக்கி அழிக்க, ஒரு ஏவுகணையைப் பயன்படுத்தியதை அடுத்து, அந்த நடவடிக்கையே, 3,000க்கும் அதிகமான கண்காணிக்க வேண்டிய விண் பொருள் துகள்களை உருவாக்கியது.
ஆனால் தற்போது இந்த விண் வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் வசித்து வரும் ஆறு விண் வெளி வீரர்களுக்கு, இந்த மோதலைத் தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை சற்று சுவாரஸ்யத்தைத் தரும். ஏனென்றால் அவர்கள் சமீபத்தில் உடைந்து போன கழிப்பறையைச் சரி செய்வது போன்ற வேலைகளில்தான் ஈடுபட்டு வந்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About