Sunday, September 30, 2012

thumbnail

காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடக அரசு உத்தரவு


உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சனிக்கிழமை இரவு காவிரியிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (28.09.2012) உத்தரவிட்டது. இதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவரிடம் முதல்வர் ஷெட்டர் விளக்கினார். இதையடுத்து, ஆளுநரின் ஆலோசனையின்பேரில் மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து (கே.ஆர்.எஸ்.) விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முதல்வர் ஷெட்டர் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது: கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலையை எடுத்துரைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை உள்ளதை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். காவிரி ஆணைய உத்தரவை நிறுத்திவைத்து, நிபுணர் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமரிடம் முறையிட தீர்மானித்துள்ளோம். மேலும் தொலைநகல் மூலம் மீண்டும் மனு அனுப்பியுள்ளோம் என்றார் அவர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், கர்நாடக ஆளுநரை முதல்வர் ஷெட்டர் சந்தித்துப் பேசிய பின்னர், காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About