Thursday, September 27, 2012

thumbnail

"உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்" உச்சநீதிமன்றம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் தமக்கு திருப்தியாக இல்லாவிட்டால், அதன் உரிமத்தை ரத்து செய்வதற்கும் தயங்க மாட்டோம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அளித்த 17 பரிந்துரைகளில் இன்னும் 11 பரி்ந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை, முறையான சுற்றுச்சூழல் அனுமதியில்லை என்ற அம்சங்களின் அடிப்படையிலும், அணு உலை விபத்து ஏற்பட்டால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றம் அந்த அணுமின் நிலையத்துக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குத் தொடர்ந்த அமைப்புக்களில் ஒன்றான பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அந்த அணுமின் நிலையத்துக்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
அந்த அணு உலைக்கு முதலில் 1989-ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. ஆனால் 1998-ல் அந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 1989 ஒப்பந்தப்படி, கூடங்குளம் அணு மின் நிலையத்தை அமைத்துக் கொடுக்கும் ரஷ்யாவுக்கே அணுக்கழிவுகளைக் கொண்டு செல்வது என்று இருந்தது. ஆனால், 1998 ஒப்பந்தப்படி, கூடங்குளத்திலேயே அவை புதைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவருவது என இருந்த முடிவு, பின்னர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் அங்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என்று மாற்றப்பட்டது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்குப் பிறகும் புதிய அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், இதில் அவ்வாறு பெறப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அணு உலைக்குச் செல்லும் நீரின் வெப்ப நிலை, அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் வெப்ப நிலை, பின்னர் மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கும் புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அப்போது கருத்து வெளியிட்ட நீதிபதிகள், "இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு கோடி மூதலிடு செய்திருந்தாலும் கவலையில்லை. மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்தான் முக்கியமானது. பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களில் திருப்தியடையாவிட்டால், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட உரிமரத்தை ரத்து செய்வதற்கும் தயங்க மாட்டோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
அக்டோபர் 4-ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஆஜராகி, சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான விவரங்களைத்த தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது என்று நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About