Thursday, September 27, 2012

thumbnail

நோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சீமென்ஸ் நோக்கியா நிறுவனத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி, இந்நிலை மாறவேண்டும் என வலியுறுத்தி, நோக்கியாவின் தலைமையகம் ஃபின்லாந்து நாட்டில் அமைந்திருப்பதால், சென்னையில் உள்ள அந்நாட்டுத் துணை தூதரகத்தின் முன் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவான சிஐடியூவின் சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற அணித்தலைவர் ஏ.சௌந்திரராஜன் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினார்.
 ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர் என்றும் அவர்களில் 80 சதமானோர் ஒப்பந்தப்பணியாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு எந்தவித உரிமைகளும் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
அவர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது,, இந்நிலை தொடருமானால் கொந்தளிப்பு ஏற்படக்கூடும், அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது மனிதவளத்துறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கிவரும் ஜி.எஸ் ரமேஷ் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டால் இங்கு வேலைவாய்ப்பைப் பெருக்கவே பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன, அவை இங்கு கால் பதிப்பதால் நம் நாட்டு பொருளாதார வளமும் கூடுகிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்றார். தவிரவும் உற்பத்திச் செலவைக் குறைத்தால்தான் இலாபத்தைப் பெருக்க முடியும் என்ற நிலையில் பல்வேறு அணுகுமுறைகளை நிர்வாகங்கள் கைக்கொள்வது தவிர்க்கவியலாதது, உலகப் பொருளாதாரம் செழிக்கும்போது இயல்பாகவே இங்கும் ஊதியம் உயரும், அதே நேரம் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகாத வண்ணம் நிர்வாகங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
தமிழக அரசு சார்பாக இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About