Sunday, September 30, 2012

thumbnail

மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வை எதிர்த்து ம.தி.மு.க. போராட்டம்: வைகோ அறிவிப்பு

மருத்துவக் கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுதவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கண்டனம் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் மத்திய அரசு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கவனத்தில் கொள்ளாமல், மருத்துவக்கல்வி, பல் மருத்துவக் கல்வி படிப்புக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

சமூகநீதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு உயர்நீதிமன்றமும், தமிழக அரசின் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பும் வழங்கி இருக்கின்றது.

இந்நிலையில் மருத்துவக் கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுதவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. நகர்ப்புற மற்றும் மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே மருத்துவ பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு மூலம் குறிப்பிட்ட சதவிகித இடங்கள் மருத்துவ கல்லூரிகளில் தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது சமூக நீதியின் அடிப்படையையே தகர்த்து விடும்.

தமிழ்நாட்டில் 2007-ல் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கல்வித் துறையில் மத்திய அரசின் தாந்தோன்றித்தனமான போக்கையே காட்டுகிறது.

மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த கல்வித் துறையைப் பறித்துக் கொண்டு, மத்திய அரசு தமது விருப்பம்போல் ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

சமூக நீதிக்கு உலை வைக்கும் மத்திய அரசு தன் போக்கினை மாற்றிக் கொண்டு நுழைவுத் தேர்வினை ரத்து செய்யாவிடில் மைய அரசை எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.க. கிளர்ச்சி செய்யும் என அறிவிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

1 Comments

avatar

Vanakkam Nan Suba, Puthiya Thalaimurai TV verum adhigaarigal alavileye nindru vidugiradhu. Innum mel sendru arasaangathai velipadayaga, adhan thavarugalai vimarsikka vendum.

Sevai thodarattum.

Reply Delete

About