Wednesday, September 26, 2012

thumbnail

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு இன்று கூடுகிறது

புதுடெல்லி,செப்.27-
 
மத்திய அரசு சமீபத்தில் டீசல் விலையை உயர்த்தியதோடு, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. அத்துடன், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றுக் கொண்டது.
 
மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ்-சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித் பவார் மீது ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் புகார் கூறப்பட்டதால், அவர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அரசியல் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில், சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது மம்தா பானர்ஜி கூட்டணியை விட்டு விலகிய பிறகு நடைபெறும் முதல் கூட்டம் ஆகும். இந்த கூட்டத்தில், கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியதால் எழுந்துள்ள சூழ்நிலை, மராட்டிய மாநில விவகாரம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இருந்து வரும் சவால்கள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
 
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் காரியகமிட்டி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அஜித் பவார் ராஜினாமா விவகாரத்தை உங்கள் கட்சி கிளப்புமா? என்று தேசியவாத காங்கிரசின் துணைத்தலைவரும் மத்திய மந்திரியுமான பிரபுல் பட்டேலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'இல்லை' என்று பதில் அளித்தார்.   

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About