Wednesday, September 26, 2012

thumbnail

கேம்பஸ் இண்டர்வியு மூலம் ஐ.ஐ.டி. மாணவர்களை பொது நிறுவனங்கள் தேர்வு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட்டு உத்தரவு



சென்னை, செப்.27-

ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் இருந்து மாணவர்களை அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக தேர்வு செய்யக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட தடையை விலக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்களை, மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக (கேம்பஸ் இண்டர்வியு) தங்கள் நிறுவன ஊழியர்களாக தேர்வு செய்கின்றன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பழனிமுத்து மனுதாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வுக்காக சட்டங்கள் உள்ளன. இடஒதுக்கீட்டு முறை உள்ளது. மேலும், அரசுப் பணிகளுக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பலர் பெயர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு அரசு மற்றும் பொது நிறுவனங்கள் நேரில் சென்று பணியாளர்களை தேர்வு செய்வது சட்ட விரோதமானது. இப்படி ஆட்களை தேர்வு செய்வதால், வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மற்றவர்களின் உரிமை பாதிக்கப்படும்.

 எனவே ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் கேம்பஸ் இண்டர்வியு நடத்த அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். கேம்பஸ் இண்டர்வியுவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேலை வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஐ.ஒ.சி., இந்துஸ்தான் பெட்ரோலியம், சென்னை ஐ.ஐ.டி. உள்பட பல நிறுவனங்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யும்படி பிரதிவாதிகளுக்கு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை.

அதைத் தொடர்ந்து, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், இதுபோன்ற கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியு நடத்தக் கூடாது என்பதில் ஏற்கனவே இருந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கின் மனுதாரர் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இண்டர்வியுவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பலரும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தகுதியின் அடிப்படையில்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் வேலைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

 பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்களையும் கேம்பஸ் இண்டர்வியு மூலம் நிரப்புவதில்லை என்றும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் இண்டர்வியு நடத்தி மிகச் சில மாணவர்களை மட்டும் தேர்வு செய்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இந்த சூழலில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடித்தால் மாணவர்களுக்கு தேவையில்லாத இன்னல் ஏற்படும் என்று கருதுகிறோம். எனவே தடையை நீக்கி உத்தரவிடுகிறோம்.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்யப்பட்ட நியமனம் அனைத்தும் மனுவின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக வக்கீல் பிரியா ரவி ஆஜராகி வாதாடினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About