Saturday, September 29, 2012

thumbnail

கிரானைட் குவாரி முறைகேடு: துரை தயாநிதியை கைது செய்ய போலீஸ் தீவிரம்

மதுரை மேலூர் பகுதியில் கிரானைட் கற்கள் தோண்டி எடுத்ததில் ரூ.16 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 40 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பி.ஆர்.பழனிச் சாமியின் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், சிந்து கிரானைட் அதிபர் செல்வ ராஜ், அவரது மகன் சூரிய பிரகாஷ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் நாகராஜன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  துரை தயாநிதி மதுரையில் உள்ள கட்சி பிரமுகர்கள் வீடுகளில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று மு.க.அழகிரியின் மகள் கணவரின் சகோதரர் தீபக், அவரது தந்தை ரத்தினவேல் ஆகியோரை விசாரணை நடத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். ரத்தினவேலுவிடம் விசாரணை நடத்திய போது அவரது வீட்டில் துரை தயாநிதி இல்லை என தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் தீபக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது. துரை தயாநிதி தற்போது எங்கு இருக்கிறார் என்பது பற்றி தெரியவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் நாக மலைப்புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் உள்பட பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கும் இல்லாததால் அண்ணாநகர், வில்லாபுரம், கரிமேடு உள்பட பல இடங்களில் வசித்து வரும் முக்கிய தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் துரைதயாநிதி சிக்கவில்லை.
கொடைக்கானலில் உள்ள அழகிரியின் பங்களா வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று விமானம் மூலம் மத்திய மந்திரி மு.க.அழகிரி மதுரை வந்தார். அவரை தி.மு.க. வக்கீல்கள் சந்தித்து பேசினர். துரைதயாநிதியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக மு.க.அழகிரியிடம் வக்கீல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணனிடம் கேட்ட போது கூறியதாவது:-
துரைதயாநிதி இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. துரை தயாநிதியின் நண்பர்கள் யார் யார்? என்று விசாரித்து வருகிறோம். அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தப்படும்.
மத்திய மந்திரி மு.க.அழகிரி வீட்டில் துரைதயாநிதி இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்தால் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் உள்பட தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க மற்றொரு தனிப்படை சிவகங்கை, விருது நகர், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு விரைந்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About