Tuesday, September 25, 2012

thumbnail

பெரியார் தி.க.பிரமுகர் கொலையில் கைதான தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரியார் தி.க. கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
 
இந்நிலையில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
 
பேரிகை அருகே விவசாயி ஆலம்பாஷா என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தொடர்ந்து உத்தனப்பள்ளி போலீசார் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக தொடர்ந்த 2 வழக்குகளிலும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.கைது செய்யப்பட்டார்.
 
அதன்பின்பு தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை, சந்தனப்பள்ளி பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
 
இதேபோல் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெரியார் தி.க.பிரமுகரை தாக்கிய வழக்கிலும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். இப்படி தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க தேன்கனிக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.
 
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கலெக்டர் மகேஸ்வரனுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
 
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி போலீசார் சேலம் கொண்டு வருகிறார்கள். குண்டர் சட்டத்தில் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About