Sunday, September 02, 2012

thumbnail

உறுதியாக கட்டப்பட்டு இருப்பதால் அண்ணா வளைவு கடும் சிரமத்துடன் இடிப்பு: இன்று இரவுக்குள் அகற்றப்படும்

உறுதியாக கட்டப்பட்டு இருப்பதால் அண்ணா வளைவு கடும் சிரமத்துடன் இடிப்பு: இன்று இரவுக்குள் அகற்றப்படும்
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணாவின் 75-வது பிறந்தநாளையொட்டி பிரம்மாண்டமான முறையில் அண்ணா பவள விழா நினைவு வளைவு அமைக்கப்பட்டது.




1985-ம் ஆண்டு இந்த வளைவை அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இந்த வளைவுக்கு முன் பகுதியில் அண்ணாவின் முழு உருவ சிலையும் உள்ளது. சென்னையில் அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்த அண்ணா வளைவை மேம்பாலம் கட்டுவதற்காக உடைக்க முடிவு செய்யப்பட்டது.



இதை உடைப்பதற்காக ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அண்ணா வளைவை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்திருந்தனர். பகல் நேரத்தில் போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் உடைக்க முடிவு செய்யப்பட்டது.



பக்கத்தில் ஆஸ்பத்திரி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் இடித்து தள்ள முடியவில்லை. இதனால் துண்டு துண்டாக அறுத்து அகற்ற திட்டமிட்டனர். விடுமுறை நாளான நேற்று இரவு 10 மணி அளவில் பணி தொடங்கியது.



நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு பணிகளை மேற்பார்வையிட்டனர். ஒவ்வொரு வளைவையும் பீடத்திற்கு மேல் பகுதியில் அறுத்து கிரேன் மூலம் தூக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. பல கிரேன் உரிமையாளர்கள் நேரில் வந்து பார்த்து விட்டு இவ்வளவு உயரத்தில் இருந்து இந்த வளைவை எடுக்க முடியாது என தயங்கி சென்று விட்டனர்.



இறுதியில் சென்னையில் உள்ள சுதர்சனம் டிரான்ஸ் என்ற ராட்சத கிரேன் உரிமையாளர் நேரில் வந்து பார்த்து வளைவின் எடை, கிரேனின் தாங்கும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து பின்னர் பணிகளை செய்ய ஒப்புக்கொண்டார்.



அதன்பிறகு வளைவின் மேல்பகுதி கிரேனில் கட்டப்பட்டது. பின்னர் டைமண்ட் கட்டர் மூலம் ஒரே நேரத்தில் வளைவின் இருபக்கத்திலும் அறுத்தார்கள். திடீரென்று ஒரு அறுவை எந்திரம் பழுதடைந்தது. இதனால் ஒரு பக்கத்தில் மட்டும் அறுக்கும் பணி தொடர்ந்து நடந்தது.



விடிய விடிய அறுத்து இன்று காலையில் ஒருபக்க பணி முடிந்தது. அதன்பிறகு மறுபக்க ஆர்ச்சை அறுக்க தொடங்கினார்கள். ஒரு பக்க வளைவு மட்டும் 84 ஆயிரம் கிலோ எடை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன. அந்த காலத்தில் மிகவும் உறுதியாக கட்டப்பட்டிருந்ததால் அறுக்கும் பணி மிகவும் மெதுவாகத்தான் நடக்கிறது. இன்று மாலைக்குள் ஒருபக்க வளைவு அகற்றப்பட்டு விடும் என்றும், நாளை காலைக்குள் முற்றிலுமாக ஆர்ச் அகற்றப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த வளைவு அப்புறப்படுத்தப்பட்டதும் மேம்பாலம் கட்டும்பணி வேகப்படுத்தப்படும். இந்த பகுதியில் அமைய இருக்கும் 2 மேம்பாலங்கள் மற்றும் 1 சுரங்கப்பாதை மூலம் பூந்தமல்லி ரோட்டின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.



இதில் ஒரு மேம்பாலம் பூந்தமல்லி ரோட்டில் தொடங்கி நெல்சன் மாணிக்கம் ரோட்டில் முடிவடையும். இன்னொரு மேம்பாலம் பூந்தமல்லி ரோட்டில் தொடங்கி அண்ணாநகர் 3-வது அவென்யூவில் முடியும்.



பாலம் கட்டும் பணிகள் முடிந்ததும் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி 3-வது அவென்யூவுக்கு எளிதில் சென்று விடும். அதேபோல சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழே செல்லும். 3-வது அவென்யூவில் இருந்து சூளைமேட்டுக்கு வருபவர்கள் உள்வட்ட பாதை வழியாக வரவேண்டும்.



இதன்மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அண்ணா ஆர்ச் இடிக்கப்படுவதை யொட்டி சென்னையின் அடையாள சின்னத்தை கடைசியாக பார்க்கும் ஆர்வத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About