Friday, September 14, 2012

thumbnail

டீசல் விலை உயர்வு -இப்போதும் வழக்கம்போல கத்தி விட்டு அமைதியாக அடுத்த வேலையைப் பார்ப்பாரா கருணாநிதி !

சென்னை: எப்போதெல்லாம் மத்திய அரசு மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறதோ அப்போதெல்லாம் ஒப்புக்கு எதையாவது கூறி விட்டு அறிக்கை விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளும் திமுக தலைவர் கருணாநிதி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு விதித்துள்ள கடுமையான விதிமுறைகளையும் வழக்கம் போல சாதாரணமாக ஒரு அறிக்கை மூலம் கண்டித்து விட்டுள்ளார். இப்போதாவது அவர் மத்திய அரசுக்குக் கடும் நெருக்கடி தரும் வகையில் ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்ற கடுமையான முடிவை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்களைக் கடுமையாக பாதிக்கிற எந்த விஷயத்தையும் திமுக தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அதேசமயம், திமுகவுக்கு பாதகமான அல்லது திமுக முன்னணியினருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வெளியிலிருந்து ஆதரவு, அமைச்சரவையில் சேருவதில்லை, ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறுவோம் போன்ற மிரட்டல்களை படு வேகமாக முன்வைக்கிறது திமுக. இது மக்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால் மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட எதற்குமே இப்படிப்பட்ட தீவிர முடிவுகளை திமுக எடுப்பதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

தற்போதும் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி விட்டது மத்திய அரசு. அதேபோல சிலிண்டருக்கும் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளனர். இது மக்களை கடும் கஷ்டத்தில் தள்ளியுள்ளது. இப்போதும் வழக்கம் போல ஒரு அறிக்கை விட்டுள்ளார் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சற்றும் எதிர்பாராததும், மிகவும் அதிகமானதுமான டீசல் விலை உயர்வு தொடர்ச்சியான பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் விலை கடுமையாக ஏறிவரும் நிலையில், டீசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வானது, ஏழைகளையும், நடுத்தர மக்களையும், மாத ஊதியம் பெற்று குடும்பம் நடத்தக் கூடியவர்களையும் பெருமளவுக்கு பாதிக்கும்.

உயர்ந்து வரக்கூடிய பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, டீசலுக்கு செய்யப்பட்டுள்ள விலை உயர்வினை தாமதம் ஏதுமின்றி திரும்பப் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி உடனடியாக, கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று செய்யப் பட்டுள்ள அறிவிப்பும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார்.

உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசை மிரட்டும் திமுகவும், அதன் தலைவர்களும், இப்போது மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த விஷயத்திற்காக என்ன தீவிர நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அல்லது இப்போதும் வழக்கம்போல கத்தி விட்டு அமைதியாக அடுத்த வேலையைப் பார்ப்பாரா கருணாநிதி என்ற எதிர்பார்ப்பும் உள்ளளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About