Sunday, September 16, 2012

thumbnail

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக  வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி அணை திறக்கப்படும். ஜனவரி 28-ந் தேதி அணை திறக்கப்படுவது நிறுத்தப்படும்.
 
மேட்டூர் அணை திறப்பால் சேலம், நாமக்கல், கரூர், மற்றும் திருச்சி, தஞ்சை,திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
 
காவிரி டெல்டா பாசனத்தின் மூன்று போக சாகுபடிக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொருத்து நீர் தேவை குறையும். இந்த ஆண்டு குறிப்பிட்டபடி அணையை ஜூன் மாதம் 12-ந் ததி திறக்கப்படவில்லை. நீர் மட்டம் குறைவாக இருந்ததாலும், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்ததாலும் அணை திறக்கப்படவில்லை.
 
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து கர்நாடக அரசு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் கர்நாடகம் தண்ணீர் திறந்தது. அதுவும் கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்தது.
 
நேற்று 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 10 ஆயிரத்து 44 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 83.31 அடியாக இருந்தது. அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
 
நேற்று மாலை மேட்டூர் அணைப்பகுதியில் மழை பெய்தது. 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.  இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா  உத்தரவுப்படி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.
 
முதலில் மேல் மதகு வழியாக 5 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்படும். பிறகு அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.
 
மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணை போய்ச் சேர 2 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மதகுகளை சீரமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது. தண்ணீர் திறப்பதற்கான ஆயத்தப்பணிகளில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
 
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது இது 79-வது ஆண்டாகும். அணையின் வரலாற்றில் 15 ஆண்டுகள் மட்டுமே ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. 11 ஆண்டுகளில் அணையின் நீர் மட்டம் நல்ல நிலையில் இருந்ததால் முன்கூட்டியே அணை திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளில் அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் அணை தாமதமாகவே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். அது போல இந்த ஆண்டும் அணை தாமதமாக திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About