Friday, September 14, 2012

thumbnail

இடிந்தகரை கடல் போராட்டத்தில் மயங்கி விழுந்த மீனவர் இன்று சாவு


கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் நேற்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை கடற்படை ரோந்து விமானம் கண்காணித்தபடி இருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற இடிந்தகரை கீழத்தெருவைச் சேர்ந்த சகாயம் (வயது 42) என்ற மீனவர் ஒரு பாறை மீது ஏறி நின்று தாழ்வாக பறந்த ரோந்து விமானத்தை பிடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது சகாயம் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சகாயத்துக்கு மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர்.அவர் இறந்து போன தகவல் அறிந்ததும் அவர்கள் அனைவரும் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் சகாயம் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அவரது உறவினர்கள் இதுபற்றி கூறும்போது, சகாயம் சாவுக்கு விமான பைலட்டே காரணம். அவர் போராட்டகாரர்களை கலவரப்படுத்தவே விமானத்தில் தாழ்வாக பறந்தார். எனவே அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சகாயம் இறந்த தகவலை இடிந்தகரையில் உள்ள போராட்ட அமைப்பு நிர்வாகிகளுக்கு தெரிவித்து விட்டோம். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் இருக்கும் சகாயத்தின் பிணத்தை வாங்க வேண்டாம் என்று கூறி விட்டனர். எனவே நாங்கள் பிணத்தை வாங்க மாட்டோம். அரசே அவரது உடலை வாங்கி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சகாயம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About