Saturday, September 01, 2012

thumbnail

கூடங்குளம் அணு உலையில் அடுத்த வாரம் எரிபொருள் நிரப்பப்படும் வளாக இயக்குனர் சுந்தர் தகவல்


நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ13,500கோடி செலவில் அணுமின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய 2 அணு உலைகள் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளன.

முதல் அணு உலையில் அனைத்து பணிகளும் முடிந்து மின் உற்பத்தி செய்ய தயாராக இருந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என வலியுறுத்தி அணு உலை எதிரப்பாளர்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினார்கள்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. அணு உலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தியை தொடங்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வழக்குகள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தன. அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அவற்றில் அணுமின் நிலையத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அணு உலையில் எரிபொருள் நிரப்பவும், அணுமின் நிலையம் செயல்படவும் அனுமதி அளித்தது.

அதுமட்டுமின்றி அணுமின் நிலைய செயல்பாடுகளையும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே அணு உலை அழுத்தக்கலனில் பொருத்துவதற்கான 163 எரிகலன்கள் தயார் நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு எரிகலனும் 4.5மீட்டர் நீளமுடையது.

ஒவ்வொன்றிலும் 700 கிலோ எடையுள்ள செறியூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பப்பட்டுள்ளன. அந்த எரிகலன்கள் அனைத்தும் ஒரு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அணு உலை இருக்கும் பகுதிக்கு எரிகலன்களை கொண்டு வருவதற்காக பிரத்யேக வாகனம் ஒன்றும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனம் அணு உலைக்கு வரும் வழியில் ஒரு இடத்தில் இடையூறாக இருந்தது. இதனால் அந்த வாகனம் எளிதாக வந்து செல்லும் வகையில் ஒரு கட்டிடத்தின் குறிப்பிட்ட பகுதி மாற்றியமைக்கப்பட்டது. அந்த பணியும் முடிந்துவிட்டது.

இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் இன்று கூறியதாவது:-

முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளோம். இறுதியாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய நிபுணர் குழு அடுத்த வாரம் செவ்வாய் அல்லது புதன்கிழமையில் ஆய்வு செய்ய உள்ளது. அவர்களின் ஆய்வு முடிந்ததும் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி உடனடியாக தொடங்கப்படும். எரிபொருள் நிரப்பப்பட்டதும் முதலில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி செய்யப்படும். அதன்பிறகே பயன்பாட்டிற்கான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த பணிகள் நடக்கும்போதே, 2-வது அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About