Monday, September 24, 2012

thumbnail

90 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது: சுழற்பந்து வீரர்களுக்கு டோனி பாராட்டு

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்னில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. ரோகித்சர்மா 33 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), காம்பீர் 38 பந்தில் 5 பவுண்டரியுடன் 45 ரன்னும், வீராட் கோலி 32 பந்தில் 40 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். ஸ்டீவன்பின் 2 விக்கெட்டும், டென்பெஞ்ச், சுவான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. அந்த அணி 14.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் கீவ்ஸ் வெட்டர் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். நீண்ட இடைவேளிக்கு பிறகு இடம் பெற்ற ஹர்பஜன்சிங் மிக சிறப்பாக பந்து வீசினார். அவர் 12 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பியூஸ் சாவ்லா, இர்பான்பதான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

நேற்றைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஷேவாக், ஜாகீர்கான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஹர்பஜன்சிங், பியூஸ் சாவ்லா, அசோக் திண்டா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஷேவாக், ஜாகீர்கான், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷேவாக், ஜாகீர்கான் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் நீக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்திய அணி 6 பேட்ஸ்மேன், 5 பவுலருடன் நேற்று களம் இறங்கியது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

சுழற்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக வீசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக ஹர்பஜன்சிங் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாக வீசினார்.

இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இடம்பெற்ற ஹர்பஜனும், சாவ்லாவும் நன்றாக பந்து வீசினார்கள். இதேபோல ரோகித்சர்மா, காம்பீர் ஆகியோரது பேட்டிங் அபாரமாக இருந்தது.

ஆடுகளத்துக்கு தகுந்தவாறு ரோகித் சர்மாவை யுவராஜ் சிங்குக்கு முன்னதாக களம் இறக்குவோம். ஹர்பஜன்சிங்கும், பியூஸ் சாவ்லாவும் சிறப்பாக பந்து வீசியதால் இனி வரும் போட்டிகளில் 11 வீரர்களை தேர்வு செய்வதில் பல பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. கடுமையான முடிவே என்றாலும் சிறந்த அணியை தேர்வு செய்வோம்.

சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளித்தது கடினமான முடிவே. ஆனால் அனைத்து வீரர்களும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இவ்வாறு டோனி கூறினார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் கூறும்போது, எங்கள் அணி வீரர்கள் மோசமாக ஆடினார்கள். ஹர்பஜன்சிங் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்றார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About