Saturday, September 01, 2012

thumbnail

மீன்பிடிக்க வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் கட்டணம்: கேரள அரசின் அறிவிப்பால் குமரி மீனவர்கள் அதிர்ச்சி

மீன்பிடிக்க வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் கட்டணம்: கேரள அரசின் அறிவிப்பால் குமரி மீனவர்கள் அதிர்ச்சி
குமரி மீனவர்கள் ஏராளமானோர் கேரளாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கேரளாவில் மீன்பிடிக்க கேரள மீன் வளத்துறை மற்றும் துறைமுகத்திற்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.15 ஆயிரம் என்ற அடிப்படையில் வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வரும் குமரி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்கம், தமிழக,புதுவை மாவட்ட மீனவ மக்கள் கூட்டமைப்பு, ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கம் உள்ளிட்டவற்றின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

கூட்டத்தில் அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

குமரி மாவட்ட மீனவர்கள் காலம் காலமாக கேரள பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் கேரள பகுதியில் மீன் பிடிக்க வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் உபயோக கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கடந்த 9-ந் தேதி அறிவித்துள்ளனர். இது மீனவர்களின் உரிமையை பறிப்பதாகும். வரும் காலங்களில் மற்ற மாநில கடல் எல்லையில் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலையை உருவாக்கும். இதுதவிர கேரள மீனவர்கள் ரூ.750 மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாரபட்சமான நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்க கூடியது ஆகும். எனவே தமிழக அரசு மீன்வளத்துறை மூலமாக கேரள அரசு மீன்வளத்துறையிடம் பேசி பாரபட்சமற்ற முறையில் மீனவர்களின் உரிமையை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About