Tuesday, September 18, 2012

thumbnail

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: 270 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

காவிரி டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த 1934-ம் ஆண்டில் இருந்து இவ்வாறு அணையின் மூலம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறை மட்டுமே குறிப்பிட்ட தேதியன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 11 ஆண்டுகள் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவும், 52 ஆண்டுகள் குறிப்பிட்ட தேதிக்கு பிறகும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
 
இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லை. அதனால் தண்ணீர் திறக்க முடியாததால் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
 
இதனையடுத்து செப்டம்பர் 17-ந்தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று பகல் 12.20 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு 13,441 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
 
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 84.79 அடியாக இருந்தது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நீர்மின் திட்டம் வழியாக திறக்கப்படுகிறது. இதனால் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் கீழ் கதவணை மின் திட்டம் மூலம் 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 270 மெகாவாட் மின்சாரம் தயாராகிறது.
 
அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்தால் மின் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது நிலவி வரும் மின்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மேட்டூர் அணையின் மூலம் மேலும் அதிக மின்சாரம் தயாரிக்கும் வகையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் மூலம் திருச்சி மாவட்டத்தில் 0.96 லட்சம் ஹெக்டேரும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3.74 லட்சம் ஹெக்டேர் என மொத்தம் 4.7 லட்சம் ஹெக்டேர் நிலப் பகுதிகளில் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இப்போது திறக்கப்பட்டு உள்ள தண்ணீர் அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து மேலும் அதிகரிக்கும். இது வருகிற ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை திறந்து விடப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About