Saturday, September 22, 2012

thumbnail

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாததால் நடவடிக்கை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் இத்தேர்வை எழுதினர்.
 
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து மறுதேர்வு நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்தது.
 
அக்டோபர் 3-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத காலஅவகாசத்தை 3 மணி நேரமாக நீட்டிப்பு செய்தது. தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் இந்த தேர்வை தேர்வு கட்டணம் செலுத்தாமல் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமின்றி புதிதாக விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
இதை ஏற்று தமிழக அரசு சார்பில் தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தேர்வை அக்டோபர் 3-ந்தேதிக்கு பதிலாக அக்டோபர் 14-ந்தேதி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித்சவுத்ரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 
ஐகோர்ட்டு அறிவுரையின்படி புதிதாக தேர்வு எழுதுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். போட்டி பலமாக இருந்தால் தரமான ஆசிரியர்களை தேர்வு செய்யலாம், அந்த அடிப்படையில் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பதாரர்களுக்கு 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
 
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி பெற வேண்டும். விண்ணப்பிக்க 28-ந்தேதி கடைசிநாள். தேர்வு கட்டணம் எஸ்.சி.எஸ்.டி.பிரிவனருக்கு ரூ.250-ம், இதர பிரிவினருக்கு ரூ.500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும்.
 
ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 2448 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதற்கு 37 பேர் வரவில்லை. எஞ்சிய 2411 பேரில் 202 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை. மேலும் பலர் 2 பட்டங்களை பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மீதமுள்ள 2209 பேரை பணியில் அமர்த்துவது குறித்து ஐகோர்ட்டு அறிவுரையின்படி கமிட்டி ஒன்று அமைக்கப்படுகிறது. பள்ளி கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில் பள்ளி கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக்கல்வி இயக்குனர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த வாரம் கூடுகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2209 ஆசிரியர்களை பணியில் எவ்வாறு நியமிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About