Saturday, August 04, 2012

thumbnail

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் பதவிக் காலத்தில் பெற்ற விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்களை எல்லாம், அவர் தன் சொந்த ஊரான அமராவதிக்கு எடுத்துச் சென்று விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. /Former president Pratibha Patil has taken a range of expensive gifts to her hometown Amravati.

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தன் பதவிக் காலத்தில் பெற்ற விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்களை எல்லாம், அவர் தன் சொந்த ஊரான அமராவதிக்கு எடுத்துச் சென்று விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவி வகிப்பவர்கள், தங்களின் பதவிக் காலத்தில் ஏராளமான பரிசுப் பொருட்களை பெறுவது வழக்கம். ஆனால், பதவிக்காலம் முடியும் போது, அவற்றை எல்லாம் தங்களின் வீட்டிற்கு அவர்கள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால், கடந்த மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரதிபா பாட்டீலோ, தன் பதவிக் காலத்தில் பெற்ற, விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்களை எல்லாம், தன் சொந்த ஊரான, மகாராஷ்டிர மாநிலம் அமராவதிக்கு கொண்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

பொற்கோவில் மாதிரி: பிரதிபா தன் பதவிக் காலத்தில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கிய பரிசுப் பொருள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பொற்கோவிலின் மாதிரி வடிவம் உட்பட, 150க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை பெற்றிருந்தார். விலை மதிப்புமிக்க இந்த பரிசுப் பொருட்கள் எல்லாம், தற்போது அமராவதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு, பிரதிபா பாட்டீல் குடும்ப அறக்கட்டளையால் நடத்தப்படும், வித்யா பாரதி கல்லூரியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகைக்கும், பிரதிபா பாட்டீல் குடும்ப அறக்கட்டளைக்கும், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

டிசம்பரில் திறப்பு: கல்லூரியில் அமைக்கப்படும் அந்த அருங்காட்சியகத்தில், பிரதிபாவின் அரசியல் பயணம் தொடர்பான புகைப்படக் காட்சிகளும் இடம் பெறவுள்ளன. இந்த அருங்காட்சியகம், வரும் டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புப் பணி அதிகாரி கூறுகையில், ""ஜனாதிபதி பதவி வகித்த போது, பிரதிபா பெற்ற பரிசுப் பொருட்கள் எல் லாம் கடனாகத் தான் பெறப்பட்டுள்ளன. அவற்றை எந்த நேரமும் ஜனாதிபதி மாளிகை எடுத்துக் கொள்ள முடியும்,'' என் றார். அரசியல் சட்ட நிபுணரான சுபாஷ் கஷ்யப் இதுபற்றி கூறுகையில், ""பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்ற பிரதிபாவின் செயல், மரபுகளை மீறியது. ஜனாதிபதி பதவி வகிப்பவர் பெறும் பரிசுப் பொருட்கள் எல்லாம் அரசின் சொத்து மற்றும் மக்களின் சொத்து,'' என்றார்.

மீண்டும்...: பிரதிபா பாட்டீல் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. தனது பதவிக்காலம் முடிந்த பின் தங்குவதற்காக, புனேயில் ராணுவ நிலத்தை அளவுக்கு அதிகமாகப் பெற்று, அவர் பங்களா கட்டுவதாக முன்னர் சர்ச்சை எழுந்தது. பின், அந்த வீட்டில் வசிக்கப் போவதில்லை என அறிவித்து, சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்போது, பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About