Wednesday, August 29, 2012

thumbnail

ஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஈரோடு வாலிபர்

ஈரோடு மூலப்பாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் அருண் (வயது 27) பி.இ. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த சிகா சுகிஹஷி (25) என்ற இளம்பெண்ணும் அங்கு வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து அருணும், சுகியும் நட்பாக பழகினர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகிக்கு ஜப்பான் நாட்டில் உள்ள விப்ரோ கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை கிடைத்தது. இதைதொடர்ந்து அவர் அங்கு சென்றார். அடுத்த சில மாதங்களில் அருணுக்கும் ஜப்பானில் இன்னொரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைகிடைத்து விட்டது.

இதையடுத்து அவரும் அங்கு சென்றார். அங்கு ஒரு நாள் அருணும், சுகியும் சந்திக்கும் தருணம் கிடைத்தது. பின்னர் அடிக்கடி அவர்கள் சந்தித்து கொண்டனர். இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்தனர். இதையடுத்து அருண் தனது பெற்றோரிடம் ஜப்பான் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு பெற்றோர் பச்சை கொடி காட்டினர். பெண்ணின் தரப்பிலும் அருணின் திறமையை கண்டு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் சுபமுகூர்த்த நாளான இன்று (புதன்கிழமை) ஈரோட்டில் திருமணம் நடந்தது. அருணின் வீட்டில் இந்து முறைப்படி காலையில் திருமணம் நடந்தது.

புரோகிதர் வேதம் ஓத அருண் ஜப்பான் காதலியின் கழுத்தில் தாலி கட்டினார். இதில் அருணின் தந்தை கிருஷ்ணசாமி, தாய் வசந்தாமணி மற்றும் மணப்பெண்ணின் தந்தை தகேஷி, தாய் இசோகோ, தங்கை யுகி சுகிஹஷி, தம்பி ஹெண்டாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நண்பர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பு விழா நடந்தது. இதில் மணமகனின் உறவினர்கள் ஜப்பான் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். புத்த மதத்தை சேர்ந்த சுகி சாமியாராக போக நினைத்தாராம். இந்த நிலையில் அருணை கண்டதும் சாமியார் கனவை கலைத்து விட்டு அவரை கரம்பிடித்து இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About