Wednesday, August 29, 2012

thumbnail

பெண்களும் பாய்பிரண்ட் பிரச்சனைகளும்!

பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில்தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள் கிடைக்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள். கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும் அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம்பமாகிறது.

கல்லூரிக்குள் நுழையும்போது சுதந்திரம் அதிகமாகிறது. இப்போதெல்லாம் பெண்கள்கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்று தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண்-பெண் நட்புக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது. வயதுக்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே பழகுகிறார்கள்.

நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக` மாறி விடுகிறான்.

`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான்' என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது. அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும் நம்பி விடுகிறார்கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும் ஏமாந்து விடுகிறார்கள்.

நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது.

இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்பிரண்ட்' வேறு கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம்' என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது.

இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால் என்னாகும்? அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள்.

எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்பிரண்ட் வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள்.

பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் பாய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.

இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது.

இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம். குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்' செய்யும் பாய்பிரண்டுகளும் இருக்கவே செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.

வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About