Thursday, August 30, 2012

thumbnail

நிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. இன்னும் ஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை: நாளையுடன் கெடு முடிகிறது

பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித்துறையை தன்வசம் வைத்திருந்த காலக்கட்டத்தில் (2004-09), 142 நிலக்கரி சுரங்கங்கள் ஏலமின்றி பல கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டன. இதில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் கணித்து அறிக்கை அளித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாக கூறப்படும் ஊழலில் சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சி.பி.ஐ., தனது முதல் நிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து நிலக்கரித்துறை செயலாளர், இணைச்செயலாளர்கள் உள்ளிட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு உறுப்பினர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. முன்னுரிமை அடிப்படையில், துரிதகதியாக சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ள 12 கம்பெனிகள்மீது சி.பி.ஐ.யின் கழுகுப்பார்வை படிந்துள்ளது. அவற்றில் 9 சுரங்கங்கள் சத்தீஸ்கார் மாநிலத்திலும், 3 சுரங்கங்கள் ஜார்கண்ட் மாநிலத்திலும் உள்ளன. இந்த 12 சுரங்கங்களிலும் இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
 
குறைந்த விலைக்கு இவற்றை ஒதுக்கீடு பெற்றுவிட்டு, கூடுதல் விலைக்கு பிற நிறுவனங்களுக்கு விற்பதற்காகத்தான் இவற்றில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என நம்பப்படுகிறது. இந்த 12 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களையும், நிலக்கரி வெட்டியெடுக்கப்படாதது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையையும் பெறுவதற்காக நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகளை சி.பி.ஐ. குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மாநில அரசிடமிருந்து 3 நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக ஜார்கண்ட் மாநிலத்துக்கு சி.பி.ஐ. கூடுதல் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஒதுக்கீடு பெற்றுவிட்டு, இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்காத நிறுவனங்களிடம், அதற்கான விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சி.பி.ஐ. குழுவினரிடம் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் சில நிறுவனங்கள் 2005-ம் ஆண்டே சுரங்க ஒதுக்கீடு பெற்றுவிட்டு இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்கவில்லை.
 
இப்படி சி.பி.ஐ. விசாரணை நடந்து வந்தாலும்கூட, முதல் நிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்த 3 மாதங்களுக்குள், முதல் தகவல் அறிக்கையை (வழக்கு) பதிவு செய்ய வேண்டும் என்பது விதி. அந்தக் கெடு நாளை முடிகிறது. ஆனால் இதுவரை நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கைக்கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About