Friday, August 31, 2012

thumbnail

பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு: அரசும் மக்களும் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்- கவர்னர் ரோசய்யா பேட்டி

தமிழக கவர்னர் ரோசய்யா பதவி ஏற்று நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, கவர்னர் ரோசய்யா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நேற்று மாலை 6 மணிக்கு வந்தார். அவருடன் அவருடைய மனைவி சிவலட்சுமி அம்மாள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.
 
கோவில் வாசலில், கவர்னருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் வேதமந்திரங்கள் முழங்க அர்ச்சகர்களும், தகவல் மைய தலைவர் கே.அனந்தகுமார் ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, மற்றும் கார்த்திகேயன், பிரபாகர் ரெட்டி, மோகன் ராவ் உள்ளிட்ட தகவல் மைய உறுப்பினர்களும், கவர்னரை கோவிலுக்குள் அழைத்து வந்தனர்.
 
அதைத்தொடர்ந்து ஏறக்குறைய 15 நிமிடம் வெங்கடாசலபதிக்கு, கவர்னர் மற்றும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் பெயருக்கு அர்ச்சனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் வெங்கடாசலபதி, அலமேலு தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
 
கவர்னர் பயபக்தியுடன் வெங்கடாசலபதியை வழிபட்டார். பின்னர், கோவிலையொட்டி உள்ள தகவல் மைய மண்டபத்தில், தகவல் மையம் சார்பில், கவர்னர் ரோசய்யாவுக்கு, தகவல் மையத்தின் தலைவர் அனந்தகுமார் ரெட்டி பட்டு அங்கவஸ்திரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
 
இதைத்தொடர்ந்து, கவர்னர் ரோசய்யா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
 
தமிழக கவர்னராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. தமிழக அரசும், அதிகாரிகளும், தமிழக மக்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, வெங்கடாசலபதி, அலமேலு தாயாரை தரிசித்தேன். மனது நிறைவாக உள்ளது.வெங்கடாசலபதியை தரிசிக்க திருப்பதிக்கு செல்லவேண்டும் என்றில்லை. இங்கேயே தரிசிக்கலாம்.
 
இவ்வாறு கவர்னர் ரோசய்யா கூறினார்.
 
கோவிலில் இருந்து புறப்படும் முன், கோவிலில் வழக்கமாக பவுர்ணமியையட்டி நடைபெறும் கருட சேவை உற்சவத்திலும் கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டு வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About