Monday, August 27, 2012

thumbnail

மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : தஞ்சை விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப்பணிகளுக்காக ஆண்டுதோறும் ஜூன்மாதம் 12 ம் தேதி மேட்டூர் அணையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாத காரணத்தினால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்துவிட்டது. இதனால் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை. தற்போது கர்நாடகத்தில் உள்ள அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நன்றாக மழை பெய்வதால் காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் திறக்கும் நாட்கள் தள்ளிப்போவதால் தங்களால் விவசாயப்பணிகளை மேற்கொள்ள இயலாது என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய விவசாயிகள், சம்பா சாகுபடி பயிரிட ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். செப்டம்டர் இரண்டாவது வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால் விதைப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்குவதில் காலதாமதமாகிவிடும். பின்னர் பருவமழை தொடங்கிவிடும் என்பதால் இப்பொழுதே விதைப்பு பணிகளை தொடங்க ஏதுவாக உடனடியாக அரசு தண்ணீரை திறக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About