Wednesday, August 08, 2012

thumbnail

கச்சத் தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயார்: விஜயகாந்த்


மீனவர்கள் ஆளும் கட்சிக்கு பயப்படாமல் ஒன்றுசேர்ந்து என்னோடு வந்தால் கச்சத் தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயாராக இருக்கிறேன், என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேசினார்.தேமுதிக கட்சி சார்பில், ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற வறுமை ஒழிப்பு தின விழாவில் கலந்துகொண்டு, மாட்டு வண்டி மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர் மேலும் பேசியதாவது: இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும், இன்று வரை அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முதல்வர் பிரதமருக்கும், பிரதமர் இலங்கை அதிபருக்கும் கடிதம் எழுதத்தான் செய்கிறார்களே தவிர, இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை.கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை இலங்கை மீறிக் கொண்டிருப்பதை மத்திய அரசு தட்டிக் கேட்கவே இல்லை. மீனவர்கள் என்னுடன் ஒற்றுமையாகவும், ஆளும் கட்சிக்கு பயப்படாமலும் வந்தால் கச்சத்தீவை மீட்கும் வரை போராடி அதனைத் திரும்பப் பெற்றுத்தர முடியும்.தமிழகத்தில் கிரானைட் கொள்ளையும், மணல் கொள்ளையும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கிரானைட் கொள்ளையில் சம்பாதித்த தொகை ரூ. 16 ஆயிரம் கோடியையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து திரும்பப் பெற்று, அதனை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடப் பயன்படுத்திட வேண்டும்.ஆளும் கட்சிக்கு பயப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னை கைது செய்யப் பார்க்கிறார்கள். என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் யாருக்கும் பயப்படமாட்டேன். ஏனென்றால் நானோ எனது கட்சித் தொண்டர்களோ யாரிடமும் நிதி கேட்டுப் போகவில்லை. எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர். மக்களை ஏமாற்றாமல் ஆட்சி செய்ததால்தான், தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வராக இருக்க முடிந்தது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களை ஏமாற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை.தேமுதிக தொண்டர்களின் கடுமையான உழைப்பால்தான், இன்று அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது என்பதை அதிமுக மறந்து விடக்கூடாது. அதிமுக அரசு பழி தீர்க்கும் எண்ணத்தில் செயல்படாமல், மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும், என்றார் அவர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About