Thursday, August 30, 2012

thumbnail

நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-வது நாளாக முடக்கம்

நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியதில் தவறான கொள்கையை கடைப்பிடித்ததால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து முறைகேடு நடந்த காலகட்டத்தில் நிலக்கரி துறை பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறி வருகிறது.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இந்த பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்றம் தொடங்கியது முதல் 6 நாட்களாக அலுவல் எதுவும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதற்கிடையே ஒருநாள் விடுமுறைக்குப்பின் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.

அப்போது பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்கள். சபையில் கடும் அமளி நிலவியதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் டெல்லி மேல்-சபையிலும் காலை 11 மணிக்கு சபை கூடியதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளி ஏற்படுத்தியதால் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக 7-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About