Saturday, August 04, 2012

thumbnail

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச (அடிப்படை) விலையை ரூ.14 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது./2G auction: Govt call on Rs 14,000 cr base price

புது தில்லி, ஆக. 3: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச (அடிப்படை) விலையை ரூ.14 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச விலையை ரூ.14,000 கோடி முதல் ரூ.15,000 கோடியாக நிர்ணயிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

மேலும், அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வருடாந்திர கட்டணமாக வருவாய் அடிப்படையில் 3 முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்கண்ட கட்டணங்களை ப.சிதம்பரம் தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சரவை குழு ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. அவை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நிறுவனமும் 5 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்க வேண்டும் என்றும் இதற்கான அடிப்படை விலையை ரூ.18,000 கோடியாக நிர்ணயிக்கலாம் என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள், குறைந்தபட்ச ஏலத் தொகையை 80 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் செல்போன் கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்த நேரிடும் என்றும் கூறி இருந்தன. ஆனால், வெறும் 20 சதவீத அளவுக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது.

வரும் 31-ம் தேதிக்குள் புதிதாக ஏலம் நடத்தி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குறுகிய காலமே இருப்பதால், இந்த அவகாசத்தை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூனிநார் மற்றும் சிஸ்டமா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இப்போதுள்ள உரிமத்தின்படி, செப்டம்பர் 7-ம் தேதி வரை மட்டுமே சேவை வழங்க முடியும்.

செல்போன் கட்டணம் உயரும்

புது தில்லி, ஆக. 3: அலைக்கற்றை ஏலம் தொடர்பான மத்திய அமைச்சரவையின் முடிவால் அதிருப்தி அடைந்துள்ள செல்போன் நிறுவனங்கள், செல்போன் கட்டணங்களை நிமிடத்துக்கு 30 பைசா உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச விலையை ரூ.14 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டதால் இத்துறையின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.3.2 லட்சம் கோடி நிதிச் சுமை ஏற்படும். இதனால் செல்போன் கட்டணமும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About