Monday, August 27, 2012

thumbnail

மேலூர் பகுதியில் மேலும் 25,000 கிரானைட் கற்கள் கண்டுபிடிப்பு

மேலூர், ஆக. - 28 - பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய மேலூர் பகுதி கிரானைட் குவாரிகளில் நேற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேலும் 25 ஆயிரம் கிரானைட் கற்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் குவாரிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து 26 வது நாளாக நேற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கீழவளவு, அம்மன் கோவில்பட்டி, பஞ்சபாண்டவர் மலை தெற்கு பகுதியில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமானஇடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக கிரானைட் கற்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்ட வருவாய் நீதிமன்ற தனி துணை ஆட்சியர் குணசேகரன், முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் இளங்கோவன், உதவி இயக்குனர்(கலால்) ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வை மேற்கொண்ட போது பி.ஆர்.பி.நிறுவனத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் இடத்தில் ஒரு மிகப் பெரிய கண்டெய்னர் பூட்டி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். முக்கிய ஆவணங்கள் ஏதும் இதில் பூட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்த அதிகாரிகள் அங்கிருந்த ஊழியர்களிடம் சாவியை கேட்டு திறந்து பார்த்தனர். அப்போது அந்த கண்டெய்னருக்குள் மண்வெட்டி, இரும்புக் கம்பிகள் உள்ளிட்டவைதான் இருந்ததாம். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 15 ஏக்கர் பரப்பளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் கிரானைட் கற்களை கண்டுபிடித்தனர். இந்த கற்களின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கையால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கற்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கீழையூர் பகுதிகளில் மட்டும் 21,700 கற்களும், கீழவளவில் 17,500 கற்களும் அளவிடப்பட்டுள்ளன. மீதமுள்ள கற்களை அளவிட பல மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About