Monday, July 30, 2012

thumbnail

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 35க்கும் அதிகமான பயணிகள் பலியாகினர்./Train fire: 35 passengers charred to death in sleep


தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 35க்கும் அதிகமான பயணிகள் பலியாகினர். டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே வந்த போது எஸ் 11 பெட்டியில் தீ பிடித்துள்ளது. காலை 5.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கியும், புகைமூட்டத்தில் மூச்சுத்திணறியும் 35 பயணிகள் பலியாகினர். விபத்துக்குள்ளான பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் பயணம் செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த 4 தீயணைப்பு வண்டிகள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
மின் கசிவு காரணம் ?தீ விபத்திற்கு மின் கசிவே காரணம் எனக் கூறப்படுகிறது. எஸ் 11 பெட்டியின் கழிப்பறைக்கு அருகே இருந்த எலக்ட்ரிக் சர்கியூட்டில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பு தெரிவிக்கின்றது. கழிப்பறையை ஒட்டி இருந்த வாயில் வழியாக வெளியேற முடியாத அளவிற்கு தீ மளமளவென எரிந்ததால் மற்றொரு வாயில் வழியாகவே வெளியேற பயணிகள் முற்பட்டுள்ளனர். இதனால் புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி மயங்கி விழுந்து பலர் தீக்கிரையாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு நெல்லூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இதற்கிடையில் சென்னையில் இருந்து நெல்லூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள், மருத்துவ குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.28 சடலங்கள் மீட்பு : இதுவரை சம்பவ இடத்தில் இருந்து 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 சடலங்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற சடலங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் இழப்பீடு : தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் அளிக்க மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தை இன்று மாலை அவர் பார்வையிடுகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமைச்சர் முகல் ராய், சென்னையில் இருந்து நெல்லூர் செல்கிறார்.
பிரதமர் இரங்கல் : ஆந்திராவில் நடந்த ரயில் விபத்து குறித்து பிரதமர் மன்மோகன்சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதமாக செயல்படுத்துமாறு ரயில்வே துறைக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளை செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About