Sunday, May 27, 2012

thumbnail

ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய பயணிகள்

பெட்ரோல் விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆட்டோ கட்டணம் உயர்ந்து விட்ட நிலையில் அடுத்து என்னென்ன விலை உயர போகிறதோ என்ற கவலை ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வேலைக்கு செல்வோர் ஆட்டோவை நாடி செல்கின்றனர். பணம் செலவானால் பரவா இல்லை. சரியான நேரத்துக்கு செல்லவேண்டும் என்று ஆட்டோவில் ஏறுகிறார்கள். ஆனால் பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் உயர்ந்து விட்டது.

2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆட்டோவில் செல்லும் சிலர் கட்டணம் கட்டுப்படியாகாததால் மாற்று வழியை யோசிக்கிறார்கள். அவர்கள் மனதில் முதலில் தோன்றுவது சைக்கிள் ரிக்ஷாதான். சைக்கிள் ரிக்ஷா தொழில் சென்னை நகரில் சைக்கிள் ரிக்ஷாவை வால் டாக்ஸ் ரோடு, சவுகார்பேட்டை, யானைகவுனி, வடசென்னை பகுதிகளில் அதிகம் காணலாம்.

புரசை வாக்கத்திலும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. சைக்கிள் ரிக்ஷாவில் வயதானவர்கள், வடநாட்டுக் காரர்கள்தான் அதிகம் சவாரி செய்கிறார்கள். தற்போது ஆட்டோ கட்டண உயர்வால் கூடுதல் நேரமானாலும் பரவாயில்லை என்று சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாற தொடங்கி விட்டார்கள்.

வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டாண்டில் சவாரிக்காக காத்திருந்த ரிக்ஷா ஓட்டுபவர்களின் கருத்து வருமாறு:-

ரிக்ஷா தொழிலாளி குணசேகரன்:- சென்னை நகரில் 12,827 ரிக்ஷாக்கள் ஓடியது. இப்போது 2,700 ரிக்ஷாக்கள் மட்டும் உள்ளது. இந்திக்காரர்கள் தான் ரிக்ஷாவில் விரும்பி செல்கிறார்கள். அவர்களை நம்பித்தான் எங்கள் பிழைப்பு உள்ளது.


தமிழ் ஆட்கள் ரிக்ஷாவை விரும்புவதில்லை. ஆட்டோ கட்டணம் உயர்வால் சிறிது தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல ரிக்ஷாவை அவர்கள் விரும்புவார்கள். இங்கிருந்து (வால்டாக்ஸ் ரோடு) சவுகார்பேட்டைக்கு செல்ல ரூ.30 முதல் ரூ.40 வரை கேட்போம். ஆட்டோவில் இரு மடங்கு கேட்பார்கள். குறுகலான சந்துக்கள் நிறைந்த சவுகார்பேட்டை போன்ற பகுதிகளில் ஆட்டோக்கள் செல்லாது. ஆனால் சைக்கிள் ரிக்ஷா சந்துக்களில் எளிதாக சென்று பயணியின் வீட்டு வாசலில் இறங்கி விடுவோம்.

ரிக்ஷா தொழிலாளி பெரியசாமி:- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வட மாநில பயணிகள் ரிக்ஷாவை விரும்புகிறார்கள். பயணிகளுக்கு மட்டும்தான் கட்டணம் வசூலிப்போம். லக்கேஜுக்களுக்கு வசூலிக்க மாட்டோம்.

வடமாநிலத்தை சேர்ந்த குப்தா:- சைக்கிள் ரிக்ஷாவில் செல்வதால் செலவு குறைவு. மேலும் வீட்டு வாசலில் இறக்கி விடுவார்கள். இதனால் நாங்கள் பெரும்பாலும் ரிக்ஷாவைதான் விரும்புவோம். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் வட மாநில பயணிகள் குடும்பத்துடன் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிச் செல்கிறார்கள். தற்போது ஆட்டோ கட்டண உயர்வால் தமிழ் ஆட்களில் சிலர் அருகில் உள்ள வீட்டுக்கு  ரிக்ஷாவில் சென்றதை பார்க்க முடிந்தது.

இதுபோல் சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்வது அதிகரித்தால் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளிகளின் வாழ்க்கை முன்னேறும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About