Sunday, May 27, 2012

thumbnail

விவாகரத்து பெற்றாலும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

விவாகரத்து பெற்றாலும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: விவாகரத்து ஆன பெண்களுக்கு கணவரின் அசையா சொத்தில் பங்கு அளிப்பதற்கான சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த 2-ந் தேதியன்று திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

இருதரப்பு விருப்பத்துடன் விவாகரத்து கேட்டு மனு செய்யும் தம்பதிகளுக்கு, அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த கால அவகாசத்தை ரத்து செய்யும் வகையில், இம் மசோதா கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்த மசோதா, பெண்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், விவாகரத்து பெறுவது எளிதாகி விட்டால், பெண்கள் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும் என்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அச்சம் தெரிவித்தனர்.

இதனால், மசோதா மீதான விவாதத்துக்கு சல்மான் குர்ஷித் பதில் அளிப்பதை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த திருத்த மசோதாவில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவாகரத்து என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி, பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கேட்டாலும், 6 மாத காலம் பொறுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, இந்த 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ விரும்பினால், கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு தரப்பு மட்டும் விண்ணப்பிக்க முடியாது.

மேலும், விவாகரத்து ஆன பெண்களுக்கும், அவருடைய குழந்தைகளுக்கும் கணவரின் அசையா குடியிருப்பு சொத்துகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட பங்கு உண்டு என்றும் இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த பங்கைப் பெற, விவாகரத்து பெற்ற பிறகு, மனைவி தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About