Monday, May 28, 2012

thumbnail

தீ விபத்துக்குப் பிறகு, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை மூன்றாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூர், மே. 28: தீ விபத்துக்குப் பிறகு, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை மூன்றாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 10-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட், இரும்புத் தூண்கள், கேபிள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதனால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 840 மெகா வாட் மின்னுற்பத்தி தடைபட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட கழிவுகள், இரும்புத் தளவாடங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நிலக்கரி சேமிக்கும் பங்கர் பகுதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததை அடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டில் திங்கள்கிழமை மின் உற்பத்தி முழுவீச்சில் தொடங்கியது.
இதுகுறித்து மேட்டூர் அனல் மின் நிலையத் தலைமைப் பொறியாளர் எம்.மாது கூறியது:
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், மின் வாரியத் தலைவரின் வழிகாட்டுதல்படி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்றன.
இந்தப் பணியில் 350 தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். பணிகள் விரைவாக நடைபெற்றதால் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது பிரிவில் திங்கள்கிழமை மின் உற்பத்தி தொடங்கியது. இதில் 210 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
மற்ற மூன்று யூனிட்களும் படிப்படியாக இயக்கப்பட்டு வியாழக்கிழமைக்குள் (மே 31) மேட்டூர் அனல் மின் நிலையம் முழு உற்பத்தியைத் தொடங்கும் என்றார் அவர்.
பாராட்டு: குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுத்ததற்காக அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து அங்கு 840 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தி செய்த நான்கு அலகுகளும் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்து குறித்த விவரங்களை சட்டப் பேரவையில் தெரிவித்தேன். 840 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கும் வகையில் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.
இப்போது, அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இரும்புக் கழிவுகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் கடந்த 14-ம் தேதியன்று தொடங்கப்பட்டன. இதன் காரணமாக, 210 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாம் அலகு திங்கள்கிழமை காலை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
மேலும், எஞ்சிய மூன்று அலகுகளும் படிப்படியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு வரும் 31-ம் தேதி முதல் தனது முழுத் திறன் அளவான 840 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யத் தொடங்கும்.
மிகக் கடினமான சீரமைக்கும் பணியில் இரவு பகல் பாராது முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய தமிழக மின்வாரிய தலைவர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About