Tuesday, May 29, 2012

thumbnail

மிரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்-ஜெகன்மோகன் ரெட்டியின் கைது

மிரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி தன் மீதே நம்பிக்கை இழந்துவிட்டதன் வெளிப்பாடுதான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் கைது விவகாரம்.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் மீது சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைக்கும் மத்திய அரசுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லைதான். சில வாரங்களுக்கு முன்பு அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த வழக்குடன் தொடர்புடைய ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் கனிமத் துறை பொறுப்பு வகித்தவரும், தற்போது அமைச்சராக இருப்பவருமான வெங்கட்ரமண ரெட்டியையும் கைது செய்துள்ளனர். எல்லாம் சரி. ஆனால், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் ஜெகன் மோகனைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அனைவரும் எழுப்பும் கேள்வி.ஆந்திர மாநிலத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய எல்லா தொகுதிகளிலும் போட்டியில் உள்ளது. அப்படியிருக்கும்போது, வேட்புமனுத் தாக்கல் முடிந்து, பிரசாரம் தொடங்கப்பட வேண்டிய நாளில் அவரைக் கைது செய்து, அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று சிபிஐ வாதாடுகிறது. ஜூன் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.இந்தத் தேர்தலில் அவர் பிரசாரம் செய்தால், வெற்றி கிடைக்குமா, கிடைக்காதா என்பதல்ல பிரச்னை. ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யும் வாய்ப்பைத் தடுப்பது முறையா என்பதுதான் கேள்வி. மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பிள்ளையாக இருக்கிறது சிபிஐ என்கிற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது, மத்தியப் புலனாய்வுத் துறையின் இந்த நடவடிக்கை.காங்கிரஸýக்கு எதிரான வாக்குகள் ஜெகன்மோகனுக்கு ஆதரவாகச் சென்றுவிடும் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. ஆகையால்தான் இத்தகைய நடவடிக்கையை, அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்துகிறது என்று ஜெகன்மோகனின் தாயார் குற்றம் சாட்டும்போது அது நம்பும்படியாக இருக்கிறது. மக்களின் அனுதாபத்தைப் பெறும் வகையிலும் இருக்கிறது.இடைத்தேர்தலில் போட்டியிடும் 16 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் சட்டப்பேரவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும்கூட தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆந்திர சட்டப்பேரவைத் தலைமைக் கொறடா காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் அறிவுறுத்தினார். சட்டப்படி அது சாத்தியமில்லை என்று கூறி, வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.ஜெகன்மோகன் ரெட்டி பெயரில் வருவாய்க்கு அதிகமான சொத்து காணப்படுகிறது என்பதை விசாரணை செய்து, சிபிஐ தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பதை நாம் குற்றம் காணவோ குறை கூறவோ இல்லை. இந்தச் சொத்து மிகக் குறுகிய காலத்தில் வந்து குவிந்தவை என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பதவி வகித்த காலத்தில்தான் இந்தச் சொத்துகள் சேர்ந்துள்ளன என்கிற சிபிஐயின் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.நமது பஞ்சாயத்து உறுப்பினர்களிலிருந்து, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் என்று முறைகேடாகச் சொத்து சேர்க்காதவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று பாரபட்சமே இல்லாமல் முறையாகச் சோதனை நடத்தினால் 5% பேர்கூடத் தேறுவார்களா என்பது சந்தேகமே. தேர்தலுக்குத் தேர்தல் நமது மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு அதிகரிக்கிறதே, அது எப்படி, ஏன் என்று கேட்கக்கூட நாம் தயாராக இல்லையே, இந்த நிலையில் மாட்டிக் கொண்ட ஜெகன்மோகன் ரெட்டியை மட்டும் குறை கூறி என்ன பயன்? அதற்காக அவரை நாம் நியாயப்படுத்தத் தயாராக இல்லை.காங்கிரஸ் தலைமைக்கும், ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கும் தன்னம்பிக்கை இல்லை என்பதுடன் தோல்வி பயம் பேயாய்ப் பிடித்தாட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் பல எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகனுக்கு ஆதரவாகச் சென்றுவிடுவார்களோ, இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்துவிடுவோமோ என்று பதற்றம். ஆட்சி போய்விடுமோ என்ற அச்சம்.காங்கிரஸின் முக்கியத் தலைவராகவும் ஆந்திர முதல்வராகவும் இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இந்த அளவுக்குச் சொத்துகளை வாங்கிக் குவிக்க முடிந்ததற்குக் காரணம் அவரது தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசுதான். இப்போது அவரது மகனைச் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்வதும் காங்கிரஸ் அரசுதான். அந்த வகையில் இந்த வழக்கில் நியாயமாகப் பார்த்தால் குற்றவாளி - அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும். தனது முதல்வர் பதவியைப் பயன்படுத்தி முறைகேடாக சொத்து வாங்கிக் குவித்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியைத் தட்டிக் கேட்கத் தவறிய காங்கிரஸ் தலைமை, இப்போது அவரது மகன் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருப்பதைப் பார்த்துப் பயந்து அவருக்கு எதிராகக் களமிறங்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.இந்த இடைத்தேர்தலில் நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்றால், ஜெகன்மோகன் ரெட்டி பிணையில் வெளியே வந்து பிரசாரம் செய்வதற்கு சிபிஐ மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. முதலில் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தபோதிலும், இரண்டாவதாகத் தாக்கல் செய்திருக்கும் பிணை மனுவை நீதிமன்றம் அனுமதித்து, சிபிஐயின் கருத்தைக் கேட்டுள்ளது. இந்த விசாரணை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இனியும் பிணை வழங்கக்கூடாது என்று சிபிஐ வாதிடுவதற்கு இது சரியான தருணம் அல்ல.ஏற்கெனவே எல்லா ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஜெகன்மோகன் பிணையில் வந்து தடயங்களை அழித்துவிடுவார் என்று சிபிஐ மீண்டும் கூறும் என்றால், அது அரசியலாகவும், மத்திய ஆளும் கட்சியின் உத்தரவாகவும் இருக்குமே தவிர, நேர்மையின் வெளிப்பாடாக இருக்காது.யானை பருத்த உருவமும் வலிய தந்தங்களும் கொண்ட மிருகம். ஆனால், சில நேரங்களில் தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும். ஜெகன்மோகன் ரெட்டியைக் கைது செய்யும் காங்கிரஸ் கட்சியின் பதற்றமான முடிவு யானை தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானதாகத்தான் இருக்கிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About