Monday, May 28, 2012

thumbnail

காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை: ஒரே நாளில் 3,500 மெகாவாட்

காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை: ஒரே நாளில் 3,500 மெகாவாட்

தமிழகம் சாதனை படைக்கும் அளவுக்கு, காற்றாலை மின் உற்பத்தி நேற்று ஒரே நாளில், 3,500 மெகாவாட்டைத் தாண்டியது. காற்றாலை மின் உற்பத்தியால், மின்வெட்டு நீக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக, 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை, ஐந்து மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை, மின் வெட்டு இருந்தது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்று வீசும் பருவ காலம் துவங்கியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கிறது. கடந்த வாரம் வரை, 2,500 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தியானது. கடந்த சில தினங்களாக, 3,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது.

சாதனை: நேற்று காலையில், 3,516 மெகாவாட் அளவுக்கு அதிகபட்ச உற்பத்தியானது. காற்றாலை வரலாற்றில், இந்தியாவில் ஒரே நாளில் எந்த மாநிலத்திலும், இவ்வளவு அதிகமாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆனதில்லை. இதுகுறித்து, மின்துறை உற்பத்திப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதிக அளவு காற்றாலை மின்சார உற்பத்திக்கு உகந்த இடமாக உள்ளது. இயற்கையாகவே உயர்ந்த மலைகளும், உயரம் குறைந்த குன்றுகளும், கணவாய்ப் பகுதிகளும் கலந்த பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகம் உள்ளதால், பல இடங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளதால், மின்சார உற்பத்தியும் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உற்பத்தி: காற்றாலை மின்சாரத்தை பொறுத்தவரை, நண்பகல் மற்றும் பகல் பொழுதை விட, நள்ளிரவிலும், காலையிலும் அதிக அளவுக்கு உற்பத்தியாகிறது. ஆனால், மாலை நேரம் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும் பகல் நேரத்தில், காற்றாலை மின் உற்பத்தி நிலையற்றதாக உள்ளது. தற்போது, தமிழகத்தில் பல்வேறு மின் நிலைய கோளாறுகளாலும், புதிய திட்டங்களின் தாமதத்தாலும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள நிலையில், காற்றாலை மின்சாரம்தான் ஓரளவு நிம்மதியைக் கொடுத்து உள்ளது

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About