Saturday, May 26, 2012

thumbnail

29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே 26: பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 அளவுக்கு சில நாள்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளும் தங்களது எதிர்ப்பைக் காட்ட ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுகவும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியிருப்பது, வரலாற்றில் எப்போதுமே நிகழ்ந்திராத அடாத செயல். இந்தக் கடும் விலை உயர்வைக் கண்டித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.இன்று நிலவுகிற பொருளாதாரச் சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.மத்திய அரசை தாங்கிப் பிடிக்கும் திமுக தலைவர் கருணாநிதியோ, பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தவில்லை. அதேசமயம், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகம், பல்வேறு மாநிலங்களில்...: சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய அரசு அரசைக் கண்டித்தும், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கட்சியின் அமைப்புரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புது தில்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதே தேதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About