Thursday, April 26, 2012

thumbnail

மீனவர்களுக்கு நீதி பெற்றுத் தந்த கேரள அரசு. தமிழக அரசு பாடம் படிக்குமா ?



கேரளாவின் கடல் பகுதியில் தமிழ் மீனவர்கள் இருவர் இத்தாலிய ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து கேரளா அரசு இத்தாலிய வீரர்களை கைது செய்ததோடு கப்பலையும் கைப் பற்றியது. இந்திய அரசும், இத்தாலிய அரசும் கேரளா அரசுக்கு எவ்வளவோ அழுத்தம் கொடுத்ததும் , கேரளா அரசு இத்தாலிய வீரர்களை விடுவிப்பதாக தெரியவில்லை. இதனால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும் என்றும், இத்தாலி உடனான நட்பு பாதிக்கும் என்றும், கைது செய்ய கேரளாவிற்கு அதிகாரம் இல்லை என்றும் இந்திய அரசு கேரளா அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த போதும் கேரளா அரசு தன்னுடைய மாநில மக்களின் நலன் தான் முக்கியம் என்று இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தை அலட்சியம் செய்தது. அதன் விளைவாக இன்று சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் இருவருக்கும் ஒருவாறு நீதி கிடைத்தது. இத்தாலி இப்போது மீனவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நட்டஈடு கொடுத்துள்ளது.
கடல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா 1 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளதால், இத்தாலி கடற்படை வீரர்கள் விடுதலையாக உள்ளனர். கொல்லம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த அஜீஸ் பிங்கோ, கொல்லத்தை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோர் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ, ஜிரோனை கொல்லம் போலீசார் கைது செய்து, திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைத்தனர். கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டது. பலியான 2 மீனவர்களின் குடும்பத்தினரும், மீன்பிடி படகின் உரிமையாளரும் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காணப்பட்டது. அதன்படி, கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடியும், படகு உரிமையாளருக்கு ரூ17 லட்சமும் நஷ்டஈடு வழங்க இத்தாலி அரசு சம்மதித்தது.

நஷ்டஈடு அளிப்பதால் இத்தாலி வீரர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும்படி நிபந்தனை விதித்தது. இதற்கு மீனவர்களின் குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து கொச்சி லோக் அதாலத் நீதிமன்றத்தில் இருதரப்புக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் ஏற்பட்டது. வீரர்கள் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இரண்டு கோடி ரூபாய் மீனவர்கள் பெற்றுக் கொண்டாலும் , கேரளா அரசு இன்னும் இத்தாலியர்களை விடுவிப்பதாய் இல்லை.

கேரளா அரசை போல் தமிழக அரசு முதுகெலும்போடு நடந்து கொண்டிருந்தால், இந்நேரம் தமிழக மீனவர்கள் 570 பேர்கள் இலங்கை கடற் படையால் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள். இது வரை தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நட்டஈடும் கிடைக்கவில்லை, இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவரை கூட கைது செய்யவும் இல்லை. தமிழக அரசு தமிழர்களுகாக இயங்குவது இல்லை என்பது இந்த விடயத்தில் நமக்கு தெளிவாத் தெரிகிறது. வாழ்க கேரளா அரசு!

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About